Step into an infinite world of stories
என்னுடைய ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு சரித்திரம் உண்டு. அதை எப்போது எழுதினேன், ஏன் எழுதினேன், என்ன ஆராய்ச்சிகள் செய்தேன் என்று யோசித்துப் பார்க்கையில் வேடிக்கையான நிகழ்ச்சிகள் ஞாபகம் வரும்.
ஆனால் ஒளிவதற்கு இடமில்லை நாவலை எழுத நேர்ந்த சம்பவம் முற்றிலும் வித்தியாசமானது.
அப்போதெல்லாம் வருஷத்துக்கு மூன்று நாலு சிறப்பிதழ்கள் வெளியிடுவார்கள். ஒவ்வொன்றிலும் ஒரு பிரபல எழுத்தாளருடைய தொடர்கதை ஆரம்பமாகும். அந்த முறை எந்த எழுத்தாளரும் உடனடியாகக் கிடைக்கவில்லை. ஆகவே அமரர் எஸ்.ஏ.பி, 'நீங்களே எழுதுங்கள்' என்றார் என்னிடம்.
'ஏற்கெனவே ஒரு தொடர்கதை என் பெயரில் வந்து கொண்டிருக்கிறது?' என்றேன். 'சின்னக் கமலா' என்ற தொடர்கதை இருபது இருபத்தைந்து அத்தியாயங்கள் வெளியாகிக் கொண்டிருந்த சமயம் அது.
'அதனாலென்ன? அது பாட்டுக்கு அது வந்து கொண்டிருக்கட்டும். வேறு பெயரில் நீங்கள் எழுதுங்கள்,' என்றார் ஆசிரியர்.
என்னிடம் நாவல் எழுதுவதற்கான 'ஐடியா' எதுவும் அப்போது இருக்கவில்லை. இருந்தாலும், அவருடைய அன்புக் கட்டளையை எப்படி மீற முடியும்? 'ஒளிவதற்கு இடமில்லை’ என்ற இந்த நாவலை, 'டி. துரைசாமி' என்ற புனை பெயரில் எழுத ஆரம்பித்தேன். டி. துரைசாமி என்று ஏன், எப்படிப் பெயர் சூட்டிக் கொண்டேன் என்பது எனக்கே தெரியவில்லை. 'சின்னக் கமலா' தொடர்கதை சுமார் இருபது வாரங்களில் முடிந்தது. அந்த இருபது வாரமும் 'ஒளிவதற்கு இடமில்லை'யும் வந்தது. ஒரே சமயத்தில் இரண்டு தொடர்கதைகளை எழுதிய தமிழ் எழுத்தாளன் நானாகத்தான் இருக்கும். இந்த இரண்டுக்கும் நடுவில் சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் முதலானவையும் எழுதிக்கொண்டிருந்தேன். அதெல்லாம் ஒரு பொற்காலம். எப்படி என்னால் முடிந்தது என்று இப்போது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இதைப் படிப்பவர்களும் நம்பமாட்டார்கள். எஸ். ஏ.பி என்ற மகத்தான மனிதரின் மந்திரக்கோல் விளைவித்த அதிசயங்களுள் இதுவும் ஒன்று.
இந்த நாவலை எழுதிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சுஜாதா ஒருமுறை காரியாலயத்துக்கு வந்திருந்தார். பகல் உணவுக்கு என் வீட்டுக்கு வரும்படி அவரை அழைத்திருந்தேன். வந்தார், புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, 'ஒளிவதற்கு இடமில்லை' என்பது ஒரு பிரமாதமான தலைப்பு! இப்படி ஒன்று எனக்குக் கிடைக்கவில்லையே என்று பொறாமையாக இருக்கிறது!' என்று சொன்னது நேற்றுப்போல் பசுமையாயும் பெருமையாயும் இருக்கிறது. 'டி. துரைசாமி' என்ற பெயர் எந்த வானத்திலிருந்து குதித்ததோ - அதே வானத்திலிருந்துதான் “ஒளிவதற்கு இடமில்லை’யும் குதித்திருக்க வேண்டும்!
இன்னொரு வேடிக்கையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
ஒரு தொடர்கதையைப் பற்றி பேசுவதற்காக என் வீட்டுக்கு வந்த டைரக்டர் கே. பாக்கியராஜ், 'எனக்கு ரொம்ப நாளாய் ஒரு ஆசை. டி. துரைசாமி என்ற ஒரு தொடர்கதை எழுதினாரே, அவரைப் பார்க்க வேண்டும்,' என்றார். இப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்' என்று நான் பதிலளித்ததும் அவர் திகைத்த திகைப்பு! 'ஒளிவதற்கு இடமில்லை' நாவலில் அவருக்கு மகா மோகம். அவருடைய 'பாக்யா' இதழில் மொத்தத் தொடர் கதையையும் வாராவாரம் மறுபிரசுரம் செய்தார்.
- ரா.கி. ரங்கராஜன்
Release date
Ebook: December 18, 2019
Listen and read without limits
Enjoy stories offline
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International