Step into an infinite world of stories
இந்திய சரித்திரத்தில் இமயமாய் உயர்ந்து நிற்பவன் மாமன்னன் அசோகன். அவனுக்கு இணையாகத் தமிழர் சரித்திரத்தில் ஒரு மன்னனைக் குறிப்பிட வேண்டுமெனில், என் நினைவில் முதலில் எழுந்து நிற்பவன் கோச்செங்கணான் தான். முற்காலச் சோழர்களில் முதன்மை பெற்ற புகழுக்குச் சொந்தக்காரனான ‘கோச்செங்கட் சோழன்' எனப்படும் கோச்செங்கணானின் வீர வரலாறு. சங்க காலப் புலவர் பொய்கையார் பாடிய “களவழி நாற்பது” என்னும் அற்புதமான நூலினுள் பொதிந்து கிடக்கிறது. மேலும் புறநானூற்றின் எழுபத்து நான்காம் பாடலும் இப்பெரு வேந்தனை அடையாளப் படுத்துகிறது.
வரலாறு வாழ்த்துவதே போன்று, புராணமும் போற்றிப் புகழ்பாடும் புகழ்ச் சரிதத்திற்கு உரியவன் கோச்செங்கணான். கோச்செங்கணான், சேரன் கணைக்காலனைச் சிறைப்படுத்தினான் என்பதும், அங்கு ஆவி தவிக்க அம்மன்னன் குடிநீர் கேட்டு, அதைக் காவலன் தரமறுத்த சினம் தாளாமல் புறப் பாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் நீத்தான். சேரன் கணைக்காலன் என்பதும் அனைவரும் அறிந்த செய்திதான் பள்ளி மாணவர்கள் பலரும் தமிழ்ப்பாட நூல்களில் படித்தறிந்த செய்திதான் இது.
இந்த வரலாறுகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; அசோகனைப் போற்றுகிற அளவு இந்திய சரித்திரம் இச்சோழ மாமன்னனை ஏன் போற்றவில்லை என்பதுதான் எனக்குப் புரியவில்லை. தென்னிந்திய சரித்திரம் - அதுவும் தமிழர் சரித்திரம் அத்தனை இளக்காரமாகி விட்டதா என்ன? அடுத்தவர்களை விடுங்கள், முதலில் நாம் இத்தமிழ் மன்னனை எந்த அளவு கொண்டாடுகிறோம்? சிபிச் சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் என்றெல்லாம் மிகைப்படுத்திய உயர்வு நவிற்சிக் கற்பனை மகிழ்வுகள் மட்டுமே நமக்குப் போதும் என்றாகிவிட்டதோ?
நான் இக்காவிய காலப் பெருவேந்தர்களின் புகழில் சிறுகீறல் ஏற்படுத்தவும் எண்ணவில்லை. அவர்களும் சோழ மரபின் சூரிய ஒளிக் கதிர்களாகத் திகழ்ந்தவர்கள் தாமே! அதே மரபின் வரலாற்றுக்கால நாயகனான கோச் செங்கணானின் கீர்த்தி எவ்வகையில் குறைந்து போயிற்று என்பது தான் நான் எழுப்பும் வினா.
‘சரி, போர் என்ன அன்புப் பிரசாரம் செய்யவா நிகழ்த்தப்படுகிறது?' எனக் கேட்பீர்கள். போரும் காதலும் தமிழரின் பண்டைச் சிறப்புகளாகப் பேசப்படுவதைத் தானே அகநானூறும் புறநானூறும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கின்றன? மேலும் போர்கள் இரு வகைப்பட்டவையாக அமைந்திருக்கின்றன. ஒன்று நாடு விரிவாக்கம் என்ற பெயரில், திரட்டிவைத்த சேனைக்குத் தீனிபோட நிகழ்த்தப் படுவது - மற்றொன்று, நாட்டைக் கபளீகரம் செய்ய எண்ணிப் பாய்ந்து வரும் மாற்றான் சேனையைத் தடுத்து நிறுத்தி, தற்காப்புப் போர் துவங்கி, கொப்பளிக்கும் வீரத்தால் மாற்றானைப் புற முதுகிட்டு ஓட ஓட விரட்டுவது. இதில் முதல் வகையை 'அசைவம்’ எனில், அடுத்ததைச் 'சைவம்' எனலாம். போரிலும் சைவப் போர் உண்டு தான்!
இந்த இரண்டாம் வகைப் போரை நிகழ்த்தியவனாகவே சோழ மாமன்னன் கோச்செங்கணான் திகழ்ந்துள்ளான். அதுமட்டுமல்லாது, போர்த் தொடுத்து வந்த சேரன் கணைக்காலன், மூன்று முறை தோற்றுச் சிறைப்பட்ட போதும் அவனை மன்னித்து விடுதலை செய்தான் சோழன் என்பது வரலாறு. பின்னும் அடாத செயல் செய்து, மீண்டும் தோற்றுச் சிறைப்பட்டபோதே ஆவி தவிக்க நீர் கேட்டு, அவமான முற்று சிறைக் கோட்டத்தில் மடிந்தான் சேரன்.
போரை விலக்கி, தமிழ் மன்னர்கள் நட்பால் ஒன்றி வாழத் தடம் அமைக்க எண்ணி முயன்றவன் கோச்செங்கணான். சோழ பூமியைச் சோறுடைத்த வளநாடாக மாற்ற அரும்பாடு பட்டு, காவிரிக்கு வழி கண்டும் - கரை அமைத்தும் - கல்லணை கட்டியும் தொண்டாற்றிய சோழகுல முன்னோர்களான கவேரனும் கரிகாலனும் சொர்க்கத்திலிருந்து வாழ்த்த, காவிரிக் கரைநெடுக எழுபது சிவாலயங்களை எழுப்பிய இணையற்ற வேந்தன் கோச்செங்கணான். அன்றைய காலகட்டத்தில் அவை, “மக்கட் பணியே மகேசன் பணி” என்று சமூக மேம்பாட்டுக்குப் பாடுபட்ட அன்பாலயங்களாகவே திகழ்ந்தன. 'அன்பே சிவம்' என்னும் கொள்கை பரப்பின. அன்று ஆலயங்களை ஒட்டியே மருத்துவம் பேணும் ஆதுல சாலைகள் இருந்தன - மூலிகை நந்தவனங்கள் அமைந்தன - அன்னசத்திரங்கள் திகழ்ந்தன. ஆலயங்களே ஊர்ப் பொது மன்றங்களாக இயங்கின.
‘சாவி‘யின் உறவினரான திரு. ராதாகிருஷ்ணன் நடத்திய 'குண்டூசி' வெகுகாலம் சினிமா இதழாக இருந்து, பிறகு ஆன்மிக இதழானது. அப்போது அதில் மூன்று வருட காலம் தொடராக இக்கதையை எழுதினேன். ‘கனல் விழிகள்' என்னும் தலைப்பில் இது வெளியானது. இப்போது அந்த நவீனத்தை 'சோழ வேங்கை'யாக, மிகச் சிறப்பான முறையில் உருவாக்கி அளித்துள்ளேன்
கோச்செங்கணானின் புகழ்பேசும் ‘களவழி நாற்பது' பாடல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் இடம்பெறச் செய்துள்ளோம். இனி ‘சோழ வேங்கை' உங்கள் கரங்களில்.
- கௌதம நீலாம்பரன்.
Release date
Ebook: January 3, 2020
Listen and read without limits
Enjoy stories offline
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International