Step into an infinite world of stories
4
Short stories
எழுதுவதற்கு ஏதோ ஒன்று நம்மைத் தூண்ட வேண்டியிருக்கிறது. அந்த ‘ஏதோ ஒன்று’ என்னைப் பொருத்தவரை நண்பர்களாகவே இருக்கின்றனர். அவர்களில் சிலர் பத்திரி்கை நடத்துபவர்கள் அல்லது பத்திரி்கையில் பணிபுரிபவர்கள். இவர்கள் தூண்டாமல், கேட்காமல் நானாக எழுதுவது என்பது அபூர்வம். அதனால்தான் எழுதத் துவங்கிய இந்தப் பத்தாண்டுகளில் இதுவரை நான்கு புத்தகங்களே வெளிவந்துள்ளன. அவை அனைத்துமே கட்டுரைத் தொகுப்புகள். இலக்கியம் அறிந்தோர் நான் எழுதும் கட்டுரைகளை நடைச்சித்திரங்கள் என்று சொல்கின்றனர். அதில் புனைவுக்குரிய அம்சங்கள் இருப்பதாலும், அதன் சுவாரஸ்யமும் சேர்ந்து அவற்றை நடைச்சித்திரங்கள் ஆக்குவதாகவும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனக்கு அவர்கள் சொல்வதைப் பற்றியெல்லாம் ஒரு புண்ணாக்கும் தெரியாததால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நண்பர்கள் கேட்கும்போது, முன்பே சொன்னது போல, நானாக அபூர்வமாக எழுதும்போது எதைப் பற்றியும் யோசிக்காமல் தோன்றுவதை மனம் போன போக்கில் எழுதுகிறேன். நான் எழுதுவது அநேகருக்குப் பிடித்திருப்பதாகவும் அறிகிறேன்.
இதில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளில் ‘ராயல் டாக்கீஸ்’ சிறுகதை ‘விருட்சம்’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தக் கதையும், அதன் முடிவும் படிக்கும்போதே வலியைத் தந்ததாகச் சொல்லப்பட்டது. எழுதுபவனுக்கு எழுதுவது எல்லாமே பிடித்தவைதான். பிடிக்காமல் எதையும் அவனால் எழுத முடியாது. ஆனால் ஒன்றிரண்டு அவனது மனதுக்கு நெருக்கமாக அமைந்து விடும். அப்படி என் மனதுக்கு நெருக்கமாக அமைந்த ‘பரமேஸ்வரி அத்தையின் மகள்’ சிறுகதை, இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அந்தச் சிறுகதைக்கு என்னை வந்து சேர்ந்த எதிர்வினைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தன. ‘என்னுடைய கதையைத்தான் நீங்கள் எழுதி விட்டீர்கள், நீங்கள் எழுதியது என்னுடைய நெருங்கிய தோழியின் கதை, என் சகோதரியின் கதை உங்களுக்கு எப்படி தெரியும்?’... இதன் உச்சமாக, நான் மதிக்கும் ஒரு மூத்த மனிதர் அந்தக் கதையைப் படித்துவிட்டு என்னிடம் சொன்னதை மறக்க இயலாது. ‘உன் கதைல வர்ற அந்த ஆளு நான்தான்’ என்றார். விசித்திரமான ஆணின் மனம் பொதுவானதுதான் என்பதை அவரது சொற்களிலிருந்து நான் உறுதி செய்துகொண்டேன். ‘பரமேஸ்வரி அத்தையின் மகள்’ கதையில் வருகிற சந்தக்கா, ஒருத்தியல்ல. வாழ்வில் நான் சந்தித்த எத்தனையோ அக்காக்கள், அத்தைகள், மதினிகள், சித்திகள், பெரியம்மைகள். அவர்கள் அனைவரின் முகங்களும் சந்தக்காவில் ஒளிந்திருக்கின்றன. நியாயமாகப் பார்த்தால் இந்தத் தொகுப்பின் தலைப்பையே ‘பரமேஸ்வரி அத்தையின் மகள்’ என்றுதான் வைத்திருக்க வேண்டும். எந்தையும், தாயுமான திருநவேலியின் ஆதி பெயர் வேணுவனம். எனது வலைத்தளத்தின் பெயரும் அதுவே. ‘பரமேஸ்வரி அத்தையின் மகள்’ உட்பட்ட இதிலுள்ள சிறுகதைகள், கட்டுரைகள் வேணுவனத்தைச் சுற்றி நடப்பவை. அதனால் இந்தப் புத்தகத்தின் தலைப்பு, ‘வேணுவனவாசம்’.
இதன் உருவாக்கத்துக்காக இதிலுள்ள சிறுகதைகளையும், கட்டுரைகளையும் படித்துப் பார்த்தபோது ஒரு வாசகனாக எனக்கு அது சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தையே தந்தது. உங்களுக்கும் அதே அனுபவம் கிட்டும் என்று நம்புகிறேன்.
Release date
Ebook: 2 July 2020
English
Singapore