Step into an infinite world of stories
சௌந்தரம்மாள் என்கிறது நான் தான். நான் பெண்ணாய்ப் பிறந்து, புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, பெண்களையும் பிள்ளைகளையும் பெற்று, அவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு பட்ட பாடு உண்டே அவைகளைச் சொல்லுகிற கதைதான் இது.
என்னைப் பற்றி ஊரில் என்னென்னவோ சொல்லிக் கொள்வார்கள். சொல்லிக் கொள்ளட்டும் என் மனசில் கல்மஷம் இருந்தால் தானே நான் அவைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?
கிறுக்குப் பிடித்தவள், நெட்டுக்காரி, மகா துடுக்கு என்றெல்லாம் சொல்வதுண்டு. ஏன்?
எதையும் நான் உடைத்துப் பேசுகிற வழக்கம். வயிற்றில் ஒன்று, பல்லில் ஒன்று, வாயில் ஒன்று என்பது என்னிடத்தில் கிடையாது. உள்ளதை உள்ளபடிதான் சொல்வேன். மறைவிடமாய்ப் பேசுகிறது, இச்சகமாய்ப் பேசுகிறது, முகஸ்துதியாய்ப் பேசுகிறது என்று என் சுபாவத்திலேயே இல்லை.
“அம்மாவுக்கு நாசூக்காய்ப் பேசவே தெரியாது” என்று என் பசங்களே சொல்லுவார்கள்.
“எனக்கு நாசூக்காய்ப் பேசத் தெரியாமல் போனால் போகிறது. என்னையும் சேர்த்து நீங்கள் நாசூக்காய்ப் பேசுங்கள். நீங்களெல்லாம் இங்கிலீஷ் படித்துக் கிழித்தவர்கள்! நாசூக்காய்ப் பேசத் தெரியும். நான் நாட்டுக் கட்டை தானே? எனக்கு எங்கிருந்து நாசூக்காய்ப் பேச வரும்!" என்பேன். பேச்சுக்குப் பேச்சு விட்டுக் கொடுக்க மாட்டேன். என் சங்கதியெல்லாம் வெட்டொன்று துண்டு இரண்டாயிருக்கும். எதிலேயும் கண்டிப்பாய்ப் பேசுகிறேனோ இல்லையோ, நான் பொல்லாதவள்! யதார்த்தவாதி... பஹுஜன விரோதி!
சின்ன வயது முதற்கொண்டு அது என் சுபாவம்; என் ஜன்மத்தில் பிறந்தது.
நான் சின்னவளாய் இருக்கும் பொழுது, “சௌந்தி” என்று என்னை ஒரு மாமி உருக்கமாய்க் கூப்பிட்டுக் கொண்டு வந்தாள்.
“இந்த வீட்டில் ‘சௌத்தி' என்று ஒருத்தருமில்லை. சௌந்தரம் என்று ஒருத்தி இருக்கிறாள். அது நான் தான்” என்று சுடச் சுடக் கொடுத்தேன்.
“உன்னைத் தாண்டி கூப்பிட்டேன் என்னமோ எடுக்கும் பொழுதே இப்படி கோபித்துக் கொள்ளுகிறாய்!" என்றாள்.
“என்னைக் கூப்பிடுகிறதென்றால் என் பேரைச் சொல்லிக் கூப்பிடுகிறது தானே? ‘சௌந்தி' என்கிறவள் யாரவள்?” என்றேன்.
சௌந்தியாம் சௌந்தி! இவள் தான் வந்து எனக்குத் தொட்டிலிட்டுப் பேரிட்டாள்!
எனக்கு வயது பதினைந்திருக்கும், அப்போது எனக்குக் கலியாணமாகவில்லை; பதினைந்து வயதுக்கு மேல் தான் எனக்குக் கலியாணம், ரொம்ப அழகாயிருப்பேன். இப்போது தான் என்ன? எனக்கு வயது நாற்பத்து மூன்று ஆச்சு; என்னவ்வளவு அழகாய் இன்னொருத்தி இருக்கிறாளா? சிறு பெண்கள் முதற்கொண்டு கிழவி வரைக்கும் இப்போது மூஞ்சியில் பௌடரைத் தடவிக் கொண்டு சாம்பல் பூசனிக்காய் மாதிரி தெருவோடு போய்க்கொண்டு இருக்கிறார்களே! வேஷம் கட்டிக் கொண்டு டிராமா ஆடுவதற்குப் போகிறவர்கள் மாதிரி அல்லவா இப்பொழுது பெண்கள் வீட்டை விட்டு வெளிக் கிளம்புகிறார்கள்? எனக்கு ஒரு நகை இல்லை. நட்டு இல்லை. பௌடரில்லை. கோண வகிடில்லை ஆனாலும் வெகு அழகாயிருப்பேன். எங்கள் அகத்துக்காரரே, “சௌந்தரம்! உன் கண்ணழகு ஒருத்தருக்குமே கிடையாதடி” என்பார். “என் கண் மாத்திரத்தானா அழகு?" என்று கேட்பேன்.
“உன் கண் அழகு, உன் புருவம் அழகு, உன் மூக்கு அழகு, உன் பல் வரிசை அழகு, எல்லாம் அழகுடி...!”
“குணம் மாத்திரம் அழகில்லை. ஏன்? அப்படித்தானே உங்கள் எண்ணம்?" என்பேன்.
“அதை ஏன் நீயே சொல்லிக் கொள்கிறாய்?” என்று சிரிப்பார்.
எங்கள் அகத்துக்காரருக்கு வீட்டைக் கவனித்து நடத்தத் தெரியாதே தவிர, மற்ற விஷயங்களில் தங்கமான மனுஷியன். என்ன சொல்ல வந்தேன் ஆமாம்! எனக்குப் பதினைந்து வயது. தினம் ஒரு பெண் வீட்டுக்குப் போய்ப் பூப்போட நான் கற்றுக்கொண்டு வருகிறது; வழியில் தினம் ஒரு கிழம் என்னை விறைத்து விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு ஒரு புருஷன் பார்வை என்ன விதமான பார்வை என்று தெரியாதா! கிழம் என்றால் அது முழுக் கிழமில்லை; முக்கால் கிழம். அறுபத்து முக்கால் நாற்பத்தைந்து வயதிருக்கும். அந்தக் கிழம் தன்னை இருபது வயதுக் குமரன் என்று நினைத்துக் கொண்டு விட்டாற் போலிருக்கிறது! தினம் நான் போகிற சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்து என்னை விறைத்து விறைத்துப் பார்க்கும். ஒரு நாள் பார்த்தேன் இரண்டு நாள் பார்த்தேன்; மூன்றாம் நாள் பார்த்தேன்; நாலாம் நான், "என்ன தாத்தா, என்னை இப்படி விழுங்கி விடுகிற மாதிரி பார்க்கிறீர்கள்?” என்று சிரித்துக் கொண்டே கிண்டலாய்க் கேட்டேன். முக்கால் கிழத்துக்கு முகம் சுண்டிப்போய் விட்டது.
இப்பொழுது ஒரு ஆர்வம் ஏற்பட்டிருக்கும் அல்லவா? மீதி கதையைப் படித்துப் பாருங்கள்...
Release date
Ebook: 11 December 2019
English
India