Step into an infinite world of stories
சிவசாமி எனும் ஜீவ்ஸ்
இரட்டை நாயனங்கள் பிணைந்து, பிரிந்து, ஒருங்கிணைந்து கம்பீரமாக வாசிக்கும் வாசிப்பே தனி.
இரண்டு முக்கியப் பாத்திரங்களைக் கொண்டு புனையப்பட்ட நகைச்சுவை எழுத்தோவியங்களும் அவ்வாறே.
நகைச்சுவை எனும் தீஞ்சுவையை வாரி வழங்கிய இரு இமயங்களில் பி.ஜி. உட்ஹவுஸ் ஒருவர்.
மற்றொருவர் தேவன்.
ஆங்கிலத்தில் சொற்சிலம்பங்கள் பல ஆடி தன் 94 வயதுவரை வாசக விசிறிகளை காலம் காலமாக சிரிக்க வைக்க எழுதிக் குவித்தவர் உட்ஹவுஸ். கதாபாத்திரங்களில் அவர் படைத்த ஜீவ்ஸும், பெர்ட்டி ஊஸ்டரும், ஷெர்லாக் ஹோம்ஸ், டாக்டர் வாட்ஸனைப் போல நிஜமாகவே உயிர் வாழ்ந்தவர்களா என்ற பிரமிப்பை உண்டாக்கக்கூடிய அளவில் உயர்ந்து, ரசிகர்களை இன்றும் மகிழ்விக்கின்றனர்.
உட்ஹவுஸின் நகைச்சுவையை தமிழில் மொழி பெயர்க்க முயற்சி செய்வது தொன்னையில் ஷாம்பெயினை ஊற்றி வழங்குவதற்கு ஒப்பாகும்.
லண்டன் சூழ்நிலையில் வலம்வரும் கதாபாத்திரமான பெர்ட்டி ஊஸ்டர் கட்டை பிரம்மசாரி.
அவருடைய பட்லர், காரியதரிசி, ஆலோசகர், ஆபத்பாந்தவராக பரிமளிக்கும் ஜீவ்ஸ் வெகுளியான தன் பணக்கார எஜமானனுக்கு உறுதுணையாக இருந்து எவ்வாறு பல சந்தர்ப்பங்களில் அவரைத் தன் இழுப்புக்கு இழுக்கிறார் என்பதை உட்ஹவுஸ் தன் வார்த்தை ஜாலங்களுடன் நடைச் சித்திரங்களாக்கி தெவிட்டாத நகைச்சுவை விருந்துகள் பல படைத்துள்ளார்.
ஜீவ்ஸும், ஊஸ்டரும் நம் நாட்டில் பிறந்திருந்தால் எவ்வாறு இருக்கும் என்ற கனவின் அடிப்படையில் தமிழ்ப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்களான சிவசாமியும் பஞ்சாமியும் வைத்து புனையப்பட்ட இந்த நூல் என்னுடைய அறிமுக முயற்சி. பொன் வைக்க வேண்டிய இடத்தில் நான் வைத்தது ஒரு பூவாகக்கூட அல்லாமல் ஒரு மொட்டாகவாவது அமைந்தது என்று, உட்ஹவுஸைப் பாராயணம் செய்தவர்கள், செய்பவர்கள் இம்முயற்சியைப் பரிசீலனை செய்துவிட்டுக் கருதினால் ஜீவ்ஸ் பாணியில் தன்னடகத்துடன் சிரம் தாழ்த்தி 'தாங்க் யூ ஸார்’ என்று நன்றி தெரிவிப்பேன்.
- ஜே.எஸ். ராகவன்
Release date
Ebook: 23 December 2019
English
India