Step into an infinite world of stories
என்னையும் பாலாவையும் பார்ப்பவர்கள் “நெஜமாகவே ரெண்டு பேருக்குமே எழுதத் தெரியுமா?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்பார்கள். எழுதத் தெரிந்த இரண்டு பேர் எப்படி ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க முடியும் என்பதே பலரது சந்தேகம். எங்களை விடுங்கள், தங்கள் எழுத்தில் தனித்தனி நடையழகுடன் கணவனும், மனைவியும் வெற்றிகரமான எழுத்தாளர்களாக இருக்க முடியும் என்று அசத்திக்கொண்டிருக்கும் வேதா கோபாலனையும், பாமா கோபாலனையும் பார்த்து பிரமியுங்கள்.
அந்த தம்பதியுடன் எழுத்தாளர்களாக அறிமுகம் துவங்கி, நண்பர்களாக அடர்த்தியாகி, இன்றுவரை ஆரோக்கியமாக வளர்கிறது எங்கள் உறவு.
சிறியவர், பெரியவர், முதியவர், புதியவர் என்று எந்தப் பாரபட்சமும் இன்றி, யாரையும், எதற்கும் பாராட்டும் அவர்களுடைய பெரிய இதயங்களைக் கண்டு நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம்.
இங்கே பதிய வந்தது அதைப் பற்றி அல்ல. உங்கள் கைகளில் குடியேறியிருக்கும் பாமா கோபாலனின் இந்தப் புதினம் பற்றி. மாத நாவல்கள், வார நாவல்களாகக்கூட வெளியாகி வாசகர்களுக்குப் பெரும் தீனி போட்ட காலத்தில், குமுதத்தின் மாலைமதியில் வெளியானது இந்நாவல்.
மாத நாவல்கள் எழுதுவது எழுத்தாளர்களுக்கு ஒரு சவால். இத்தனைப் பக்கங்கள் என்று தீர்மானமானபின், அந்த வரையறைக்குள் தங்கள் வித்தைகளைக் களம் இறக்க வேண்டும். சுவாரசியமான எழுத்தால் பக்கத்துக்குப் பக்கம் வாசகர்களின் ஆர்வத்தையும் பிடித்து வைத்துக் கொண்டு படித்து முடித்தபின் கதை திருப்தியாக இருந்தது என்ற விமர்சனத்தையும் வரவழைக்க வேண்டும். இதில் அநாயாசமாக வெற்றி பெற்றிருக்கிறார், பாமா கோபாலன்.
ஒவ்வொரு பாத்திரத்தையும் கச்சிதமாக வடிவமைத்தபின் கதை தானாக நீரோடை போல் செல்கிறது. திடுக் திருப்பங்களுடன் நிறைவு பெறுகிறது. கடைசிவரை சஸ்பென்ஸை நிலைநிறுத்தி, கதையை சுவாரசியமாகக் கொண்டு போயிருக்கும் பாமா கோபாலனுக்குப் பாராட்டுகள்.
மிக்க அன்புடன்,
சுரேஷ் (சுபா)
Release date
Ebook: 18 May 2020
English
India