Step into an infinite world of stories
முதியவரான அந்தப் பாதிரியாரின் கையிலிருந்த சிறிய உருவத்தைப் பார்க்கையில் அராபிய அதிகாரிக்குப்பிடரியில் சிலிர்த்தது. பச்சைக் கல்லில் செய்யப்பட்ட அதை முற்காலத்தில் ஒரு சிறிய துளை போட்டுக் காற்றுக் கறுப்பு அடிக்காதபடி தாயத்துப் போல் அணிந்து வந்திருக்கிறார்கள். புதை பொருள் ஆராய்ச்சியின் போது பாதிரியாருக்கு அது கிடைத்திருந்தது. திரும்பப்பையில் போட்டுக்கொண்டார்.
வடஈராக்கில் பாதிரியார் மேற்கொண்ட புதைபொருள் ஆராய்ச்சி முற்றுப்பெற்றுவிட்டது. அராபிய அதிகாரியிடம் விடைபெற்றுக்கொண்டு தாயகத்துக்கு - அமெரிக்காவுக்கு - திரும்புமுன் ஆராய்ச்சித் தளத்தைக் கடைசி முறையாகப் பார்த்துவர அவர் புறப்பட்டார்.
நகரத்தின் மண்ணை உதறிவிட்டு, டைக்ரிஸ் நதியைத் தாண்டி, ஊரின் வெளிப்புறத்தில் நடந்தார். புராதன இடிபாடுகளை அடைந்ததும் அவருடைய நடை மெதுவாயிற்று. ஏனெனில் ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும் போதும் அந்த உருவமற்ற அமானுஷ்யமான உணர்வு மேலும் மேலும் பயங்கரமான வடிவமெடுக்கலாயிற்று.
இருதய நோயாளியான அந்தப் பாதிரியார் இடிபாடுகளைத் துருவி நோக்கினார். அஷுர்பானிபால் அரண்மனையினருகே சற்றுத் தயங்கினார். பிறகு கல்லில் செய்த ஒரு சிலையை ஓரக்கண்ணால் கவனித்தார். உட்கார்ந்த தோற்றம். சீரில்லாத இறக்கைகள். கூரிய நகம் கொண்ட கால்கள். குரூரமான சிரிப்பினால் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு இழுத்துக் கொண்டுள்ள வாய்.
பிசாசு - என்ற துர்த்தேவதையின் சிலை.
திடீரென்று அவரிடம் ஒரு தளர்ச்சி ஏற்பட்டது.
அவருக்குத் தெரிந்துவிட்டது. புழுதியை வெறித்து நோக்கினார். நிழல்கள் விரைந்தன. நகரத்தின் வெளிப்புற ஓரங்களில் மந்தை மந்தையாகத் திரிந்து கொண்டிருக்கும் காட்டு நாய்களின் குரைப்பு இலேசாக அவருக்குக் கேட்டது. பூமியின் விளிம்புக்குப் பின்னே சூரியனின் வளையம் விழத் தொடங்கிற்று. நடுக்கும் காற்றொன்று எழும்பி வரவே, அவர் தன் சட்டையின் கைகளைப் பிரித்து விட்டுக் கொண்டு பொத்தான்களை மாட்டிக் கொண்டார்.
ரயிலைப் பிடிப்பதற்காக நகரை நோக்கி அவர் விரைந்தார். ஒரு புராதனமான எதிரியை விரைவில் சந்திக்கப் போகிறோம் என்ற நிச்சயமான எண்ணம் அவருக்கு உதித்தது.
Release date
Ebook: 2 June 2020
English
India