Step into an infinite world of stories
Fiction
இவை அனைத்தும் நாற்பதுகளுக்கு முன்னால் ஆனந்த விகடனில் எழுதப்பட்ட கட்டுரைகள். எனவே அன்றைக்கு வழக்கிலிருந்த சொற்கள் சில ஆங்காங்கே காணப்படும். எடுத்துக்காட்டாக அக்கிராசனம் வகித்தல் (தலைமை வகித்தல்), ஜமா, பிரேரேபணை (முன் மொழிதல்), வியாசம் (கட்டுரை), உபந்நியாசம் (சொற்பொழிவு) போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். ஆசிரியர் அன்றைக்குப் பயன்படுத்தியுள்ள சொற்களை அப்படியே வெளியிடுவதுதான் நம்முடைய கடமை.
எந்த ஒரு பொருளானாலும் நகைச்சுவை அரும்பி, இதழ் விரிய வைக்கிற மொழி ஆளுமை, கல்கி அவர்களின் தொடக்க கால எழுத்துக்களிலேயே காணப்படும். 'ஏட்டிக்குப் போட்டி', 'ஓ! மாம்பழமே!' போன்ற உயரியதான நகைச்சுவைக் கட்டுரைகள் வெளியான நாட்களை நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது.
இன்றைக்கு 'வரலாறு' ஆகி மறைந்து போன ஒரு கல்வி நிறுவனத்தைப் பற்றிய கட்டுரை பாலாறும் பகல் கனவும்'. இதில் இழையோடுகிற நகைச்சுவை உணர்வு ஒருபுறம் இருந்தாலும், உயரிய நோக்கங்களோடு தொடங்கி நடைபெற்ற அந்தக் கல்விக்கூடம் இன்றில்லையே என்று எண்ணினால் எல்லாம் பகற்கனவு போல் மறைந்து விட்டதே என்று மனம் கனத்துப் போகிறது.
'குருவாயூர் யாத்திரை' - ஏதோ பயணக் கட்டுரை என்று நினைக்க வைக்கும் தலைப்பு. ஆயினும், தாழ்த்தப்பட்டவர்களைக் கோவில்களுக்குள் அநுமதிக்கப் போராடிய ஒரு காலச் சூழலை இதில் காண முடிகிறது. அதில் உள்ள பல பிரச்னைகள் இன்றளவும் தீர்க்க முடியாதவைகளாக உள்ளன. இதை விடவும் அழுத்தமான முறையில், இன்றைய சீர்திருத்தக்காரர்கள் எவரும் கூட அந்தப் பிரச்னையை எழுதியிருக்க முடியாது.
“தமிழ் நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பு வலி கண்டு விடும். எழுந்து போக வேண்டுமென்று கால்கள் கெஞ்சிக் கூத்தாடும். ஆனால் போவதற்கு மனம் மட்டும் வராது.”- இப்படி ஒரு கட்டுரையில் பெரியார் ஈ.வே.ரா. அவர்களின் ஆற்றலை மதிப்பிடுகிறார் கல்கி. இந்தக் கட்டுரை எழுதப்பட்டு முக்கால் நூற்றாண்டுக்கு மேலாகிறது. பிற்காலத்தில் பெரியாரிடம் கருத்து மோதல்கள் இருந்த போதிலும் 'கல்கி' அவர்களுக்கு அவரிடம் மதிப்பு என்றும் குறைந்ததில்லை.
ஒவ்வொரு கட்டுரையும் வாசகர்களுக்குச் சுவையும் பயனும் நல்கக் கூடிய தனிச் சிறப்பு வாய்ந்தவையாக விளங்குகின்றன.
Release date
Ebook: 3 January 2020
English
India