Step into an infinite world of stories
நந்தா வீறிட்டாள். “அ... அண்ணா…!” கார் கிறீச்சிட்டு நின்றது. உத்தம் நெற்றியைப் பிடித்துக் கொண்டு கலவரமானான். “இப்படி திடீர்ன்னு குறுக்கே ரோட்டை கடப்பாள்ன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை நந்தா…” “வா… இறங்கிப் பார்க்கலாம்…” “வேண்டாம் நந்தா…! போயிடலாம்… கார்மோதி தூக்கி எறிஞ்ச வேகததுல... அந்தப் பொண்ணு கண்டிப்பா செத்திருப்பா! இறங்கிப் பார்த்துட்டிருந்தா… பிரச்சினையில் மாட்டிக்குவோம்…” “ஒரு வேளை... அந்தப் பொண்ணு உயிரோட இருந்துட்டா…?” “நந்தா...! அவ உயிரோடு இருந்தா என்ன…? செத்துப் போயிருந்தாதான் என்ன…? இந்த விபத்தைப் பார்த்தவங்க யாரும் இல்லை... நாம இங்கிருந்து எவ்வளவு சீக்கிரத்தில் கிளம்பறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது…’ “ஒரு நிமிஷம் இறங்கிப் பார்த்துடலாம்.” “வேண்டாம் நந்தா...! நான் சொல்றதைக் கேளு, நாம பாட்டுக்கு போயிட்டே இருப்போம்…” “எனக்கு மனசு கேக்கலை... அண்ணா...” நந்தா சொல்லிக்கொண்டே காரின் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினாள், நிசப்தமான இருட்டின் பின்னணியில் சில்வண்டுகள் விதவிதமாய் சுருதி சேர்த்துக் கொண்டிருக்க, நந்தா பத்தடி தள்ளி குப்புற விழுந்திருந்த அந்தப் பெண்ணை நெருங்கினாள்.குனிந்தாள். தலையில் இரத்தக்காயம் தெரிய – அந்தப் பெண்ணின் உடல் லேசாய்த் துடித்துக் கொண்டிருந்தது. சின்னதாய் முனகல் சத்தம். இரத்தப் பெருக்கை நிறுத்துவதற்காக சேலையைக் கிழித்து தலைக்குக் கட்டுப் போட்ட நந்தா திரும்பிப் பார்த்து குரல் கொடுத்தாள். “அண்ணா…!” “என்ன…? போயிட்டாளா...?” “தலையில் மட்டுந்தான்காயம். உயிர் இருக்கு…” “இருந்தா இருக்கட்டும்… வந்து கார்ல ஏறு. நாம போய்க்கிட்டே இருப்போம்…” “நீ முதல்ல இறங்கி வாண்ணா…” “எதுக்கு?” “வா… சொல்றேன்…” “நந்தா...! நீ விபரீத்தை விலை கொடுத்து வாங்கிட்டிருக்கே… வேற ஏதாவது வாகனம் இந்த வழியா வர்றதுக்கு முந்தி வந்து கார்ல ஏறு…” “நீ இப்போ… காரை விட்டு கீழே இறங்கி வரப் போறியா? இல்லையா...?” உத்தம் எரிச்சலோடு காரின் கதவை அறைந்து சாத்திவிட்டு வேக வேகமாய் நடந்து வந்து நந்தாவின் பக்கத்தில் நின்றான். “என்ன…?” “ஒரு கை பிடி... இந்தப் பொண்ணை நம்ம காருக்கு கொண்டு போயிடலாம்...” “நந்தா...! என்ன உளர்றே…?”“உளரலை அண்ணா... உயிரோடு இருக்கற பொண்ணை இப்படியே விட்டுட்டுப் போனா… கொஞ்ச நேரத்தில் செத்துடுவா… ஏதாவது மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துட்டு போயிடுவோம்...” உத்தம் கோபத்துக்குப் போனான். “நந்தா! நீ புரிஞ்சு பேசறியா…? இல்ல புரியாம பேசறியா…? இந்தப் பொண்ணை மருத்துவமனையில கொண்டு போய் சேர்த்தா… விபத்து எப்படி நடந்துசுன்னு டாக்டர் கேக்க மாட்டாங்களா?” “கண்டிபப்பா கேப்பாங்க...” “அப்படி கேட்டா என்ன பதில் சொல்றது…?” “ஒரு பொய் தயாராயிருக்கு…” “என்ன பொய்…?” “நாங்க கார்ல வரும் போது ரோட்டோரமா இந்தப் பொண்ணு விழுந்துகிடந்தா… என்னாச்சுன்னு தெரியலை. உடம்பை சோதிச்சுப் பார்த்தோம். உயிர் இருக்கவே கொண்டு வந்துட்டோம்…” ரோட்டின் மேல் வளைவில் ஏதோ ஒரு வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சம் தெரிந்து ஹாரன் சத்தம் கேட்டது. “பீங்க்கக்க…’ “அண்ணா...! ஏதோ... வாகனம் வந்துட்டிருக்கு. யோசனை பண்ண நேரமில்லை. ஒரு கை பிடி. இவளை காருக்கு கொண்டு போயிடுவோம்…” “நந்தா...! நான் சொல்றதைக் கொஞ்சம்…” “அண்ணா…! வர்ற வாகனம் போலீஸ் ஜீப்பாக்கூட இருக்கலாம்… ம்… சீக்கரம்… இவளைத் தூக்கு…” உத்தம் நந்தாவை முறைத்துப் பார்த்துக் கொண்டே கீழே குனிந்து அந்தப் பெண்ணின் உடலைத் தூக்கினான். கைகளில் இரத்தம் பிசுபிசுத்தது.
© 2024 Pocket Books (Ebook): 6610000530281
Release date
Ebook: 8 February 2024
Tags
English
India