Step into an infinite world of stories
Fantasy & SciFi
கண்ணாடி முன்னால் நின்று கேசத்தை பதினெட்டாவது முறையாக வாரினான் யாதவ். மறுபடியும் கொஞ்சம் கோல்ட் க்ரீம், ரோஸ் பவுடர், யார்ட்லி சென்ட் என்று மானாவாரியாக பூசிக் கொண்டான். ஷிபான் புடவையைக் கிழித்து தைத்தது போல பளபளப்பாக ஒரு சட்டை, ஜீன்ஸ் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ. “மறுபடியும் தலைவாரல் முடியலையா? வாரி வாரியே வழுக்கையா ஆகப்போற. எங்கே புறப்பாடு?” “நாலு மணிக்கு எத்திராஜ் வாசல்ல இருக்கணும். ஷர்மிளா காத்துட்டு இருப்பா - நேரா காஞ்சில போய் டிபனை முடிச்சிட்டு, ஒரு ரவுண்ட் சுத்திட்டு ஷர்மியை வீட்ல ட்ராப் பண்ணிட்டு நான் இங்கே வந்திருவேன்!” “இதுக்குத்தான் மாசாமாசம் ஊர்லேருந்து உனக்கு ட்ராஃப்ட் வருதாக்கும்? ‘என் பிள்ளை மெட்ராஸ்ல பெரிய படிப்பு படிக்கிறான். நாலு வருஷத்துல என்ஜினியராகி ஊரையே விலைக்கு வாங்குவான்’னு ஏதோ ஒரு கிராமத்துல உன்னைப் பெத்தவங்க பகல் கனவு காணுறவாங்க!” “இடியட்! உன் சொற்பொழிவை, மேடை போட்டு நடத்து. கொஞ்சம் சில்லறையாவது தேறும்.” “யாதவ்! உன் போக்கு சரியில்லை. அப்புறமா உன் இஷ்டம் - நல்ல ஒரு ஸ்நேகிதனுக்கு சொல்ல வேண்டிய கடமை உண்டு. சொல்லிட்டேன்.” “போடா... சொல்லிருவேன் ஏதாவது! ஆமா, நல்ல ‘யாஷிகா’ ஒண்ணு கிடைக்குமா?” “எதுக்கு?” “ஷர்மியை போட்டோ எடுக்க. ‘பலான’ போஸ்கள் தர்றனு ஒத்துக்கிட்டா நேத்து!” கண்ணடித்தான். ராஜா முகத்தைச் சுளிக்க “வரட்டுமா சின்மயானந்தா!” விசிலடித்தபடி வெளியே வரும் யாதவ், போன மாதம் இருபத்தியொரு வயதை முடித்தான்.அவன் தகப்பனார், திருநெல்வேலி பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துக் கொண்டு, கரன்ஸிகளை அறுவடை செய்து கொண்டிருப்பவர். அந்த கிராமத்தையே தன் பிள்ளை ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். மோசமான அந்த ஆசை, பல ஆயிரங்களை லஞ்சமாகக் கொடுத்து, இன்ஜினியரிங் கல்லூரியில் சேர வைத்தது. அவனுக்காக தங்குவதற்கு ரூம் ஏற்பாடு செய்து, இன்னும் எத்தனையோ... யாதவ் கல்லூரிக்கு, அவ்வப்போது போரடிக்கும் போது போவான். ராஜா அவன் ரூம் மேட்... க்ளாஸ் மேட். அவன் எத்தனையோ சொல்லியும், யாதவ் திருந்துவதாக இல்லை. ‘கிராமத்துக்கு எழுதிவிட வேண்டும். இவன் தகப்பனாருக்கு நிஜத்தைத் தெரிவிப்பது என் கடமை’ என்று தீர்மானித்து விட்டான். யாதவ்,வெளியே வந்து தன் புல்லட்டை விடுவித்தான். சரேலென அம்புபோல விடுபட்டு, சாலையின் திருப்பத்தில் நாலைந்து பாதசாரிகள், ஒரு மொபைல் லாண்டரி, குளிர் பானம் கொண்டு வரும் ட்ரை சைக்கிள் எல்லாம் அலறி விலக, பாந்தியன் சாலையில் நுழைந்து, சடுதியில் கமாண்டர் - இன் - சீஃப் ரோட்டைத் தொட்டுத் திரும்பி- எத்திராஜ் வாசலுக்கு வரும்போது ஏற்கனவே கல்லூரியின் நேரம் முடிந்து, மாணவிகளின் கூட்டம் ஓயத் தொடங்கியிருந்தது. புல்லட்டை நிதானப்படுத்தி, கண்களை அலையவிட்டான். அப்போதுதான் வந்து கொண்டிருந்தாள் ஷர்மிளா. இளம் நீலநிற சூரிதார் அணிந்து, உதிரியான கேசம் புசுபுசுவென்று முதுகு கடந்து படர - சன்னமாகச் சிரித்துவிட்டு, காஞ்சியின் வாசலைப் பார்க்க நடந்தாள். யாதவ் சட்டென கியர் மாற்றி, சரேலென காஞ்சிக்குள் நுழைந்தான். ஸ்டாண்ட் போட்டு, பூட்டி, ஹெல் மெட் விலக்கி, மறுபடியும் தலைவாரிக் கொண்டான். ஷர்மிளா நெருங்கி விட்டாள்
© 2024 Pocket Books (Ebook): 6610000510498
Release date
Ebook: 16 January 2024
English
India