Step into an infinite world of stories
Fiction
அதிகாலை நேரம் ஆழ்ந்த உறக்கம்தான் நிர்மலாவுக்கு. ஆயினும் கன்னத்தைத் தாங்கியிருந்த கைக் கடிகாரத்திலிருந்த அலாரம் ஒருதரம் கிணுகிணுத்து முடிப்பதற்குள் விழித்து, அடுத்த மணி அடிக்குமுன் அவசரமாக அதை நிறுத்தினாள். அவளுக்கு மிக அருகிலேயே போடப்பட்டிருந்த கட்டிலில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அன்னை விழித்து விடக்கூடாதே. மணியை நிறுத்திய கையோடு எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டாள். கண்ணைக் கசக்கி, உடலை நெளித்து சோம்பல் முறித்து, இன்னும் கொஞ்...சம் என்று கெஞ்சிய உடலிலிருந்து தூக்கத்தை விரட்ட முற்பட்டாள். முன்னொருதரம் இப்படி உடனே எழுந்து கொள்ளாமல், அலாரத்தை நிறுத்தி விட்டுப் படுக்கையில் புரண்டவளுக்கு மீண்டும் கண் சொக்கிவிட்டது. ஆறரைக்குப் பால்காரி கதவைத் தட்டிய பிறகு விழித்து, பதறி அடித்து எழுந்து வேகவேகமாக வேலைகளை முடித்துவிட்டு ஓடி ஓடிச் சென்ற போதும் வேலைக்குப் போய்ச்சேர முழுவதாக நாற்பது நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. ஒரே களேபரம். விஷயம் மானேஜரைத்தாண்டி, அதிசயமாய் அங்கே அன்று வந்திருந்த எம்.டி. வரை சென்று, அவரிடம் அன்று வாங்கிக் கட்டிக்கொண்டது இந்தப் பிறவி முழுமைக்கும் போதும் என்பது நிர்மலாவின் கருத்து. சம்பவம் நடந்து ஓர் ஆண்டு முடிந்து விட்டது. ஆனால் அதன் பிறகு நிர்மலா தாமதமாக எழுந்து கொண்டதும் இல்லை. ஒரே ஒரு புரளல் தானே என்று, விழித்தபின் படுக்கையில் புரண்டதும் இல்லை. மணியை நிறுத்தியதுமே ‘டக்’கென்று எழுந்து உட்கார்ந்து விடுவாள்.“முருகா சரணம்” சொல்லி உடம்பை விழிப்பு நிலைக்குக் கொணர்ந்து எழுந்தாள் என்றால் அப்புறம் பம்பரம்தான். அதிலும் அதி வேகமாகச் சுழலும் பம்பரம். நோயாளியான தாயாருக்கு, அவளுக்கு ஏற்றாற் போல முன்று வேளை உணவையும் தயாரித்து, உரிய வகையில் வைத்து மூடிவிட்டு இரண்டு வேளை காஃபியை ஃபிளாஸ்கில் ஊற்றி விட்டு, கூடவே தாயாரை எழுப்பி, பல்துலக்கி, உடம்பு துடைத்து, தலைசீவி உடை மாற்றி என்று காலை வேலைகள் அத்தனையும் செய்யவேண்டும். தானே எழுந்து குளியலறை சென்று வரத்தான் கோதைக்கு விருப்பம். ஆனால் அந்தச் சிறு சிரமம் கூடத் தாங்காமல் தாய் இரைப்பதும் மூச்சுக்குத் தவிப்பதையும் மகளால் தாங்கமுடியாது. அதன்பின் பாதித் தூக்கியும் இழுத்துமாக அழைத்து வந்து, படுக்கையில் கிடத்தி, பிராணவாயுக் குழாயை மாட்டிவிட்ட பிறகுதான் கோதைக்கு மூச்சு ஒருவாறு சீராகும். இதற்குப் பயந்தே படுக்கையிலேயே இயற்கைக் கடன்களைக் கழிப்பது கோதைக்குக் கட்டாயமாகிப் போயிற்று. இந்த உதவியெல்லாம் மகள் முகம் மாறாமல் செய்வதைக் காண அவள் மனம் நோகும். “குழந்தையாக இருக்கையில் உனக்கு நான் செய்ததற்கு இப்போதே கடன்தீர்க்கிறாயா கண்ணு?” என்று கண்ணீருடன் உட்படுவாள். நோகும் மனதிற்கு ஆறுதலாக ஏதாவது உரைத்தபடி வேலையைத் தொடர்வாள் நிர்மலா. அருகில் கிடக்கும் சாய்வு நாற்காலியில் கோதையை உட்காரவைத்து, காலை உணவைக் கொடுத்துவிட்டு தானும் குளித்து, வயிற்றுக்கும் ஏதாவது போட்டுக் கொண்டு வேலைக்குச் செல்லத் தயராகும் போது ஆயாவந்து சேருவாள். முன்னாளில் மருத்துவமனை ஒன்றில் பிள்ளை குளிப்பாட்டியவள் அவள். அங்கே பழகிய பழக்கத்தில் ‘பெட்பான்’ வைப்பது, பிராண வாயுக் குழாய் மாட்டுவது, நோயாளியைக் கையாள்வது போன்றவைகளும் அவளுக்குக் கைவரும்.
© 2025 PublishDrive (Ebook): 6610000770960
Release date
Ebook: 8 April 2025
English
India